யாழ். குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் வேண்டாம்!!

யாழ்ப்பாணத்தில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் மயானங்கள் வேண்டாம் எனும் மனிதநேயக் கோரிக்கையை முன்வைத்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அறிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் மக்கள் நெருக்கமாக வாழ்ந்து வரும் குடியிருப்புகளுக்கு மத்தியில் பிரேதங்களை எரியூட்டும் மயானங்கள் இருந்துவருகின்றன.

இம் மயானங்களில் பிரேதங்கள் எரியூட்டப்படும் வேளைகளில் உருவாகும் பிரேதப் புகையானது அம் மயானங்களுக்கு மிகவும் அருகில் வசிக்கும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளர் உள்ளிட்ட மக்களால் சுவாசிக்கப்படுவதுடன், தாங்கமுடியாத துர்நாற்றத்தை அனுபவிக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகின்றது.

சிலவேளைகளில் அரைகுறையாக எரிந்த உடற்பாகங்கள், எலும்புப் பகுதிகள் நாய்கள் போன்ற விலங்குகளால் இழுத்துச் செல்லப்பட்டு குடியிருப்புகளில் விடப்படுகின்றன.

இதனால் சுகாதாரச் சீர்கேடும், சூழல் மாசடைவும், உளவியல் ரீதியான தாக்கங்களும் ஏற்படுகின்றன.

இதன் தாக்கம் சில வகையான நோய்களையும் ஏற்படுத்துகின்றது. எனவே, மக்களின் அன்றாட வாழ்வுக்குக் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்துவரும் மயானங்கள் அச்சத்தையும், அருவருப்பையும், சுகாதாரமற்ற சூழலையும் ஏற்படுத்திவருகின்றன.

முன்னைய காலங்களில் மக்களின் குடியிருப்புகள் இல்லாத இடங்களில் இருந்து வந்த மயானங்களைச் சுற்றி சனத்தொகைப் பெருக்கத்தின் காரணமாகவும், உழைக்கின்ற ஏழைத் தொழிலாளர்களின் காணி மற்றும் வீட்டுத் தேவையின் காரணமாகவும் குடியிருப்புக்கள் தோன்றியுள்ளன.

இம் மக்கள் கடந்த காலக் கொடிய யுத்தத்தின் காரணமாகத் தம் காணிகளை இழந்து இடம்பெயர்ந்தவர்களும், அன்றாடம் உழைத்து வாழ்கின்ற கூலித் தொழிலாளர்களும், கூலி விவசாயிகளுமாவர்.

எனவே, அவர்களின் வாழ்வுக்குக் குந்தகம் விளைவிக்கின்ற மயானங்கள் அகற்றப்படவேண்டியது மிகவும் அவசியமானதொன்றாகும்.

மக்கள் குடியிருப்புகளிலிருந்து தூரமாக அமைந்துள்ள மயானங்களைப் பயன்படுத்துவது, இன்றைய போக்குவரத்து வசதிகள் சிறப்பாகவுள்ள நிலைமையில் சாத்தியமானதாகவே இருக்கின்றது.

ஆனால், ஆதிக்க சாதி மனப்பான்மையும், பண்டைய வழக்கம் என்ற பழமைவாதச் சிந்தனையும் கொண்ட சிலர் குறிப்பிட்ட சில கிராமங்களில் மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்துவரும் மயானங்களில் பிரேதங்களை எரியூட்ட வேண்டும் என விடாப்பிடியாக நிற்கின்றனர்.

இதில் பாரம்பரியம் எனக் கூறிக்கொண்டு உள்ளார்ந்தமாகப் பண்பாட்டு ஆதிக்கத்தை உழைக்கும் சாதாரண மக்களின்மீது திணித்து வருகின்றனர்.

இவ்விடயத்தில் பாதிக்கப்படும் மக்களைத் தமது அயலவர்களாகவோ, தமிழர்களாகவோ ஏன் மனிதர்களாகவோ காணத் தயாராக இல்லாத இழிவுநிலை கண்டிக்கப்படவேண்டியதாகும்.

இத்தகைய மயானப் பிரச்சினையானது உரும்பிராய் மேற்கு, ஈவினை வடக்கு – திடற்புலம், புத்தூர் மேற்கு – கிந்துசிட்டி, திருநெல்வேலி – பாற்பண்னை, மல்லாகம் போன்ற பல இடங்களில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானத்தினைப் பயன்படுத்த எத்தனித்தமைக்கு எதிரான மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக மக்களைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளுகின்றதான இம் மயானப் பிரச்சினை தொடர்பாக வடக்கு மாகாணசபை கவனத்திலெடுத்து விரைவானதொரு தீர்வை முன்வைக்கவேண்டும்.

எனவே, மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கும், சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் வெளிப்படையாகவும் உளவியல் ரீதியாகவும் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்திவரும் மயானங்கள் அகற்றப்படவேண்டும் என்ற மக்களது கோரிக்கையைச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆதரிக்கின்றது.

இம் மனிதநேயக் கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 13.05.2017 (சனிக்கிழமை) அன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்த கவனயீர்ப்பில் மனிதநேய சக்திகள், மக்கள் சார்பான பொது அமைப்புகள், சூழலியலாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுக்கின்றது எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.