விடுதலைப் புலிகளுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம்? மே 18 நினைவு நாளை குழப்ப திட்டமா?

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்காக நினைவு சின்னம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரசசார்பற்ற அமைப்பு ஒன்றினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, புலனாய்வு தகவலைகளை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலை புலிகளின் பழைய நினைவு சின்னத்தின் துண்டுகளை சேகரித்து புதிய நினைவுச் சின்னத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்திருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் விடுதலை புலிகளை நினைவு கூறும் நிகழ்வு மே 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நல்லிணக்க செயலணியின் புதிய அறிக்கையில் உயிரிழந்த போராளிகளை நினைவு கூர்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளின் நினைவு சின்ன நிர்மாணிப்பு திட்டத்திற்கு பின்னால் விடுதலை புலிகளுக்கு நெருக்கமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் உள்ளதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வுகள், மே மாதத்தில் தாயகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறான உணர்வுபூர்வ நிகழ்வுகளை குழப்பும் வகையிலும், அதனை பயங்கரவாத நிகழ்வாக சித்தரிப்பதும், போரின் போது உயிரிழந்த தங்களது உறவுகளை நினைத்து தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வினை தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் இது போன்று செய்திகளை வெளியிட்டு, தெற்கு மக்களின் மனங்களில் தொடர்ந்தும் இனவாத சிந்தனைகளை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த 8 ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை தமிழ் மக்கள் செயற்படுத்த முனைந்த போதெல்லாம் இது போன்ற செய்திகள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தென்னிலங்கை ஊடகங்களின் இது போன்ற கருத்துப் பரிமாற்றம் என்பது தமிழ் மக்களின் நினைவு கூரும் சுதந்திரத்தினையும் பறிக்கும் செயற்பாடாக அமைந்து விடுகிறது என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

பொதுவாக, ஒருவரை நினைவு கூர்வதென்பது, அடிப்படை மனிதவுரிமையாகும். ஆனால் இலங்கையில் அது பல ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு மாத்திரம் மறுக்கப்பட்டு வருகின்றது.

நல்லாட்சி மலர்ந்ததாக சொல்லும் இந்த காலகட்டத்திலும் கூட, மீண்டும் பொது மக்களின் நினைவு தினத்தினைக் கூட புலிகளை நினைவு கூர்வதாக காட்டுவதன் மூலம் அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.