வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும், மாகாண சபை அமைச்சருமான எஸ்.எம். ரஞ்சித் நேற்று தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் சமூக சேவை மற்றும் சுகாதார அமைச்சர் கே.எச். நந்தசேனவின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனது மாகாண அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதாக எஸ்.எம்.ரஞ்சித், வடமத்திய ஆளுனர் திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான இவர், நல்லாட்சி அரசாங்கத்தில் பதவி பறிக்கப்பட்டு, மாகாண போக்குவரத்து, விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள், உணவு மற்றும் கூட்டுறவு அமைச்சராக பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்த காரணத்தினாலேயே மாகாண அமைச்சர் நந்தசேனவின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள எஸ்.எம். ரஞ்சித், மைத்திரி சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்தி ஐ.தே.க.வுக்கு வாய்ப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் தானும் அமைச்சுப் பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்துள்ள அவர், தன்னுடன் மேலும் 19 மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து சுயாதீனமாக இயங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.