வடகொரியா செல்ல விரும்புகிறேன்: பதவியேற்பு விழாவில் தென்கொரிய புதிய அதிபர் மூன் பேச்சு

தென்கொரிய அதிபராக இருந்த பார்க் ஜியூன் – ஹை ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது.
ஜனநாயக கட்சி சார்பில் மூன் ஜயே-இன்னும், கன்சர் வேடிவ் கட்சி வேட்பாளராக ஹாங் ஜோன்-பையோவும், மிதவாதியான அகின் சியோல்- சூ ஆகியோர் போட்டியிட்டனர்.
நேற்று அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளர் மூன் ஜயே-இன் 41.1 சதவீத வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளான இன்று தென் கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜயே-இன் பதவியேற்றுக் கொண்டார். சியோல் நகரில் உள்ள தேசிய சபை கட்டிடத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. பதவியேற்ற பின்பு வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு முன்பாக அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய மூன் வடகொரியாவுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதேபோல், தேவையென்றால் உடனடியாக வாஷிங்டனுக்கு செல்வேன். பீஜிங் மற்றும் டோக்கியோவிற்கு செல்வேன். வடகொரியாவுக்கு சரியான தருணத்தில் செல்வேன்”என்றார்.
மேலும், நான் அனைத்து மக்களுக்கும் அதிபராக இருப்பேன். எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பணி செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் உங்களது கருத்துக்களை கேட்க விரும்புகிறேன். உங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனை விவகாரம் தற்போது உச்சக்கட்ட நிலையை எட்டியுள்ள நிலையில், தென் கொரியாவின் அதிபராக பதவியேற்ற மூன் தெரிவித்துள்ளது புதிய அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.