பாராளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி வரலாற்றில் இடம்பிடித்த ஆஸ்திரேலிய எம்.பி.

ஆஸ்திரேலியாவில் பசுமைக் கட்சி தலைவர்களில் ஒருவர் லாரிசா வாட்டர்ஸ். குயீன்ஸ்லேண்ட் செனட்டரான (பாராளுமன்ற மேல்சபை எம்.பி.) இவர், சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதற்காக மகப்பேறு விடுப்பில் சென்றிருந்த அவர், விடுப்பு முடிந்து, 2 மாத பெண் குழந்தையுடன் நேற்று பாராளுமன்றத்திற்கு வந்து, முக்கிய வாக்கெடுப்பில் பங்கேற்றார்.

வாக்கெடுப்பின்போது, தனது இருக்கையில் அமர்ந்தபடி, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். இதன்மூலம், ஆஸ்திரேலிய பாராளுமன்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இத்தகவலை டுவிட்டரில் பதிவு செய்துள்ள வாட்டர்ஸ், ‘பாராளுமன்ற அவையில் பாலூட்டப்படும் முதல் குழந்தை எனது மகள் ஆலியா என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்’ என்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அவையில் பெண் உறுப்பினர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதை அனுமதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு தீவிரமாக அழுத்தம் கொடுத்தவர் வார்ட்டர்ஸ். இது தொடர்பாக கடந்த ஆண்டு விவாதம் நடத்தப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர், இந்த புதிய சட்டத்தின்கீழ், தாய்மார்களுக்கான சிறப்பு சலுகையை பயன்படுத்தியிருக்கிறார் வாட்டர்ஸ்.