அமெரிக்கா: அணு உலையில் சுரங்கம் இடிந்து விபத்து : பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றம்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டெல் நகரின் தென்கிழக்கே 275 கிலோமீட்டர் தொலைவில் ஹான்போர்ட் அணு உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வந்தது. இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய அணுகுண்டுகளை தயாரிக்க தேவையான புளூட்டோனியம் என்ற மூலப்பொருள் இங்கு தயாரிக்கப்பட்டு வந்தது.  இந்த தொழிற்சாலை கடந்த 1987-ம் ஆண்டு மூடப்பட்டது.

இங்கு செறிவூட்டப்பட்ட அணுக்களில் இருந்து வெளியான கழிவுகள் தண்டவாளத்தின் வழியாக சிறு பெட்டிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, பலகோடி லிட்டர் அளவிலான அணுக்கழிவுகள் அனைத்தும் பூமியின் அடியில் உள்ள பாதுகாப்பான இரும்பு தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவுகளை கொண்டு செல்லும் தண்டவாளம் ஒரு சுரங்கப்பாதைக்குள் அமைந்துள்ளது. நூறடி நீளம் கொண்ட இந்த சுரங்கத்தின் மேல்பகுதி நேற்று திடீரென்று இடிந்து விழுந்தது. சுமார் 20 அடி நீளத்துக்கு இந்த சுரங்கம் இடிந்து விழுந்ததால் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இடிந்து விழுந்த சுரங்கத்தின் பாதுகாப்பு கதவுகள் உடனடியாக மூடப்பட்டன.

வெளியேறியவர்கள் அனைவரும் நல்ல காற்றோட்டமுள்ள பகுதியில் ஒன்றாக திரண்டனர். அணுக்கழிவின் கசிவு பாதித்திருக்கலாம் என்ற அச்சத்தில் உடனடியாக தண்ணீர் அருந்தவோ, உணவு உட்கொள்ளவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அருகாமையில் உள்ள பகுதிகளிலும் இந்த விபத்து தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கையாளுமாறு அங்குள்ள மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

நல்லவேளையாக இந்த விபத்தால் கதிர்வீச்சு அபாயம் ஏதும் ஏற்படவில்லை என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னர் அங்குள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.