ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு வீரர் குர்பிரீத் சிங் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஜப்பான், கொரியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்தியா சார்பில் 24 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இன்று கிரேக்கோ ரோமன் பிரிவில் இந்திய வீரர்கள் குர்பிரீத் சிங், ஹர்பிரீத் சிங் ஆகியோர் தங்கள் எடைப்பிரிவுகளில் பெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு முனனேறினர்.
75 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற குர்பிரீத் சிங், ரெப்பேஜ் சுற்றில் கிர்கிஸ்தானின் பர்கோ பெய்ஷாலீவை தோற்கடித்தார். 80 கிலோ எடைப்பிரிவில் ஹர்பிரீத் சிங், கொரியாவின் ஜூன்-ஹூயங் கிம்மை வீழ்த்தினார்
அதன்பின்னர் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் குர்பிரீத் சிங், சீனாவின் பின் யாங்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், குர்பிரீத் சிங் 0-8 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தார்.
அதன்பின்னர் 80 கிலோ எடைப்பிரிவில் ஹர்பிரீத் சிங், சீனாவின் நா ஜன்ஜியுடன் மோதினார். இப்போட்டியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ஹர்பிரீத் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய அணி வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.