இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர் கடந்த ஆண்டு (2016) மே மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) முதலாவது தனிப்பட்ட சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பதவி காலம் மேலும் 16 மாதங்கள் இருந்த நிலையில் ஷசாங் மனோகர் ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் 15–ந் தேதி திடீரென ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணத்துக்காக அவர் பதவியில் இருந்து விலகியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஐ.சி.சி. செயற்குழு சார்பில் ஷசாங் மனோகர் தனது ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஐ.சி.சி.யின் நிர்வாக மற்றும் நிதி மறுசீரமைப்பு விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஐ.சி.சி. செயற்குழுவின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஷசாங் மனோகர் தனது ராஜினாமா முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்து இருப்பதுடன், விதிமுறை திருத்த பிரச்சினை முடிவுக்கு வரும் வரை பதவியில் நீடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஷசாங் மனோகர் தனது பதவி காலம் முடியும் வரை சேர்மன் பதவியில் தொடரலாம் என்று ஐ.சி.சி உறுதி செய்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக வருகின்ற 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் தான் மனோகரின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.