இந்திய பிரிமீயர் லீக் (ஐ.பி.எல். சீசன்-10) டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்காவின் 8 வீரர்கள் இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று வந்தனர். அம்லா, டேவிட் மில்லர் பஞ்சாப் அணியிலும், கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா டெல்லி அணியிலும், டு பிளிசிஸ், இம்ரான் தாஹிர் புனே அணியிலும், டி வில்லியர்ஸ், ஷம்சி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் இடம்பிடித்திருந்தனர்.
அம்லா, இம்ரான் தாஹிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அம்லா இரண்டு சதங்களும், தாஹிர் 12 போட்டியில் 18 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தில் வருகிற 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தென்ஆப்பிரிக்கா அணி தயாராகிறது. இதனால் இந்த 8 பேரையும் வரவழைத்துள்ளது. மீதமுள்ள போட்டியில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்ட போதிலும், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பஞ்சாப் அணி இனி விளையாட இருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் அம்லா இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் புனே அணியின் வெற்றிக்கு தாஹிர் முதுகெலும்பாக இருந்தார். அவர் இல்லாதது புனே அணிக்கு பெரிய பாதிப்பாகும்.
தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி மே 24-ந்தேதியும், 2-வது போட்டி 27-ந்தேதியும், 3-வது போட்டி 29-ந்தேதியும் நடக்கிறது.
இதற்கு முன் மே 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.