விரதம் என்றால் உண்ணா நோன்பு என்று பொருள். உணவு உண்ணாமல் இறைவனை முழுமனதோடு வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. விரதம் என்றால் சிலர் முழுமையாக உணவு உண்ணாமல் இருப்பர், சிலர் காலையில் மட்டும் உணவு உண்ணாமல் இருப்பர். சிலர் பால் மற்றும் பழம், பழச்சாறு இவற்றை உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறதோ, அதற்கேற்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய நாளில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு மனிதனுக்கு சங்கடம் என்பது ஒன்று மனதால் வருகிறது அல்லது பணத்தால் வருகிறது. இந்த சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால், மூல முதற்கடவுளாம் கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி. ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் சதுர்த்தி ‘பெரிய சதுர்த்தி’ ஆகும். ஒவ்வொருவரும் தங்களது ஆவல்கள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளலாம். பொதுவாக உண்ணா நோன்பு இருக்கின்ற பொழுது நமது உடலும் வலிமை பெறுகின்றது. உள்ளமும் இறை உணர்வால் பலம் பெறுகின்றது. சதுர்த்தி திதி தேய்பிறையில் வந்தால் அது சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகின்றது.
விரதத்தைத் தொடங்கும் முறை :
சதுர்த்தி தினத்தன்று காலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக்கி, அன்றைய தினம் சந்திரன் உதயமாகும் வரை எந்த உணவையும் உண்ணாது, விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
பூஜைக்கு வேண்டிய பொருட்கள்!
பிள்ளையார் செய்வதற்கு மஞ்சள், பிள்ளையார் படம் அல்லது விக்கிரகம் (மாலை மற்றும் பூ அணிவிப்பதற்கு) அர்ச்சனை செய்வதற்கு மஞ்சள் கலந்த அட்சதை பூக்கள், வாசனை மிக்க பூக்களால் ஆன மாலைகள், பஞ்சபாத்திரம். தீர்த்த பாத்திரத்தில் சுத்தமான நீர், மணி, தூபக்கால், தீபத்தட்டு, கற்பூரம், குத்துவிளக்கு, திரி, எண்ணெய், ஊதுபத்தி, சாம்பிராணி, விபூதி, குங்குமம். அமர்ந்து பூஜை செய்வதற்கு பலகை, இனிப்புச் சுவையுடைய நெய் வேத்யப் பொருட்கள். (மோதகம், அப்பம், கொழுக்கட்டை ஏதேனும் ஒன்று. அவல், பொரி கடலையும் வைக்கலாம்)
இவற்றை யெல்லாம் வைத்துக் கொண்டு பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி, உள்ளங்கையை தீர்த்தத்தால் சுத்தம் செய்து பிறகு தீர்த்தத்தைப் பருகி ‘ஓம் அச்யுதாய நம’ என்றும், ‘அனந்தாய நம’ என்றும் மூன்றுமுறை சொல்ல வேண்டும்.
பிறகு இரண்டு உள்ளங்கைகளிலும் மஞ்சள் அரிசியான அட்சதையை வைத்துக் கொண்டு, ‘சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்னம் சதுர்புஸம், ப்ரஸன்ன வதனம் த்யோயேத் ஸர்வ வின்னோப சாந்தயே’ என்று கூறிய படி தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். பிறகு தியானம் செய்ய வேண்டும். தங்களுக்குத் தெரிந்த விநாயகர் அகவல், விநாயகர் பாடல், மந்திரங்களைச் சொல்லி மனமுருகி விநாயகரை வழிபட வேண்டும்.
பூஜை செய்யும் பொழுது நைவேத்தியமாகப் படைக்கும் கொழுக்கட்டையை, குழந்தைகள் மற்றும் பெரியவர் களுக்கு கொடுத்துவிட்டு இரவு விரதமிருந்தவர்கள் அந்தக் கொழுக்கட்டையும் பாலும் குடிக்கலாம். இயலாத வர்கள் உடல் நலம் கருதி இரவு உணவை பலகாரமாக உட்கொள்ளலாம். பகலில் பால் அல்லது பழச் சாறு குடித்துக் கொள்ளலாம்.
பூஜையால் பலன் பெற்றவர்கள் :
பார்வதி தேவி, சிவபெருமான், அரிச்சந்திரன் ஆகியோர் சதுர்த்தி விரதம் இருந்து சங்கடம் நீங்கியுள்ளனர். சீதையைத் தேடுவதற்காக அனுமார் இவ்விரதத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவ்விரதத்தை மேற்கொண்ட தேவேந்திரன் மூவுலகத்தையும் ஆண்டிருக்கின்றார். பஞ்சபாண்டவர்கள் நாடிழந்து வனவாசம் சென்ற பொழுது இந்த விரதத்தை பகவான் விஷ்ணுவின் அறிவுரைப்படி மேற்கொண்டு குருச்சேத்திரப் போரில் பகைவர்களை வென்றிருக்கின்றனர். கந்தக் கடவுளாம் முருகக் கடவுளே தவத்தில் சிறந்த முனிவர்களிடம் மனிதர்களின் சிக்கல்கள் தீர, விநாயகப் பெருமானுக்குரிய இந்த சங்கடஹர சதுர்த்தியைத் தான் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார் என்று சான்றோர்கள் எடுத்துரைப்பார்கள்.
போராட்டங்களைச் சந்தித்தவர்களெல்லாம் இந்த விரத்தினால் பலன் பெற்றிருப்பதால் முறையாக நாமும் சங்டஹர சதுர்த்தி விரதத்தை முறைப்படி மேற்கொண்டு மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும் இல்லாமல் வாழலாம் அல்லவா? சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிப்போம். சந்தோஷத்தோடு வாழ்வில் வளம் சேர்ப்போம்.