சீனாவில் நிலநடுக்கம்: 8 பேர் பலி – 20 பேர் காயம்

வடமேற்கு சீனாவில் ஜின்ஜியாங் தன்னாட்சி பிராந்தியம் உள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.58 மணிக்கு இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. டேக்ஸ்கோர்கான் கவுண்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது.

பூமி அதிர்ச்சியால் அங்கு இருந்த மக்கள் பீதியில் அங்கிருந்து ஓடினார்கள். மரங்களால் செய்யப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு பல முறை நில அதிர்வு ஏற்பட்டது.

தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இப்பகுதி அமைந்துள்ளது. இதனால் அந்த நாடுகளின் எல்லையோர பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளான நாடு சீனா ஆகும். 2008-ம் ஆண்டு மே மாதம் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (7.9 அளவு) 90 ஆயிரம் பேர் பலியானார்கள்.