சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த முக்கிய நகரம் மீட்பு

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள பல பகுதிகளை ராணுவம் மீட்டுள்ளது. ஈராக்கில் மொசூல் நகரை தவிர அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டுவிட்டன. இதேபோல சிரியாவிலும் பெரும் பகுதிகள் மீட்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைநகரம் ராக்காவுக்கு அருகே உள்ள தப்கா நகரை தற்போது ராணுவத்தினர் மீட்டுள்ளனர். குர்தீஸ் மற்றும் அரபு படையினருடன் சேர்ந்து இந்த நகரம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நகருக்கு அருகே பெரிய அணை ஒன்று உள்ளது. அதுவும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் தான் இருந்தது. அந்த அணையையும் மீட்டுள்ளனர். இதன் காரணமாக ராணுவம் ராக்கா நகருக்குள் நுழைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக குர்தீஸ் படையினர் தீவிரமாக போரிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அதே நேரத்தில் குர்தீஸ் படையினர் துருக்கி நாட்டுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே குர்தீஸ் படைக்கு ஆயுத உதவி வழங்கியதற்காக அமெரிக்காவுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.