மினி உலக கோப்பை என்று வர்ணிக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ‘டாப்-8’ அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை லீக் ஆட்டத்தில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் 4-ந் தேதி பாகிஸ்தானையும், 8-ந் தேதி இலங்கையையும், 11-ந் தேதி தென்ஆப்பிரிக்காவையும் சந்திக்கிறது.
இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருக்கும் பேட்ஸ்மேன் சோயிப் மாலிக்குக்கு இது 6-வது சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடராகும். அவர் 2002-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 6-வது முறையாக விளையாட இருக்கிறார். இதேபோல் ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), டிராவிட் (இந்தியா), வெட்டோரி (நியூசிலாந்து), மார்க் பவுச்சர், காலிஸ் (இருவரும் தென்ஆப்பிரிக்கா), ஜெயசூர்யா, மஹேலா ஜெயவர்த்தனே, சங்கக்கரா (மூவரும் இலங்கை) ஆகியோர் தொடர்ச்சியாக 6 போட்டி தொடரில் விளையாடி சாதனை படைத்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கும் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் 2002, 2004, 2006-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடினார். அதற்கு பிறகு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடாத யுவராஜ்சிங் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த போட்டிக்கு திரும்புகிறார்.
இந்த போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணையதளத்துக்கு யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி நடைபெறும் இங்கிலாந்து சிறப்பான இடமாகும். அங்கு நமது அணிக்கு எப்பொழுதும் உள்ளூர் போன்று ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும்.
இந்திய அணி கடினமான பிரிவில் இடம் பிடித்துள்ளது. அதேநேரத்தில் இந்திய அணி உள்ளூர் போட்டி தொடர்களை வெற்றிகரமாக முடித்து நல்ல பார்மில் இருக்கிறது. அதே உத்வேகத்தை சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் தொடரும் இலக்குடன் செயல்படுவோம். சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்ற இந்திய அணியின் நோக்கம் நிறைவேற பயனுள்ள பங்களிப்பை அளிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.