விராட்கோலியின் பேட்டிங்கை மட்டுமே நம்பி இந்திய கிரிக்கெட் அணி இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
மெழுகு சிலைக்கு பெயர் பெற்ற ‘மேடம் டுசாட்ஸ்’ அருங்காட்சியகத்தின் கிளை டெல்லியில் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. அந்த கிளை அருங்காட்சியகத்தில், 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவின் முழு உருவ மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று கபில்தேவ் திறந்து வைத்தார்.
பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
தரம்சாலாவில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் விராட்கோலி விளையாடவில்லை. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. எனவே இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியின் பேட்டிங்கை மட்டுமே நம்பி இல்லை என்று நான் கருதுகிறேன்.
இந்திய அணிக்கு விராட்கோலியின் பங்களிப்பு மகத்தானது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் வெற்றிக்கு, அணியின் மற்ற வீரர்களும் நிறைய பங்களிப்பை அளித்து வருகிறார்கள். நமது அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இருப்பினும் பெரிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அணியின் அனைத்து உறுப்பினர்களும் பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமான தாகும்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இங்கிலாந்து பிட்ச்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் தங்களது திட்டத்தை எப்படி? அமல்படுத்துகிறார்கள் என்பது முக்கியமானது. இந்திய அணிக்கு வெற்றி பெறும் திறன் இருக்கிறது என்றாலும், திட்டமிட்டு எதிரணிக்கு எந்த மாதிரி நெருக்கடி அளிக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானதாகும். இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லையே? என்று கேட்கிறீர்கள். அதேநேரத்தில் சீனியர் வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர்களை ஏன்? சேர்க்கவில்லை என்ற கேள்வியும் எழும். தேர்வு குழு தனது பணியை செய்து இருக்கிறது. அது குறித்து கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லை.
இந்தியா அடுத்த கபில்தேவை எப்பொழுது உருவாக்கும் என்று கேட்கிறீர்கள். அது முடியாத காரியம். தற்போது இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய நல்ல ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். உலகின் சிறந்த விக்கெட் கீப்பிங் மற்றும் ஆல்-ரவுண்டராக டோனி விளங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.