புனே அணி இதுவரை 12 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. கடந்த 8 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்று தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் புனே அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு வருகிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் புனே அணி 12 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்தது.
அந்த ஆட்டத்தில் புனே அணியின் பேட்டிங் எடுபடாவிட்டாலும், நேர்த்தியான பந்து வீச்சு மூலம் 149 ரன் இலக்கை எட்டவிடாமல் ஐதராபாத் அணிக்கு அணை போட்டது. வேகப்பந்து வீச்சாளர் உனட்கட் ‘ஹாட்ரிக்’ உள்பட 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அவர் இந்த சீசனில் இதுவரை 17 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அந்த அணியின் மற்றொரு வீரரான இம்ரான் தாஹிர் 18 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். அடுத்த சுற்று வாய்ப்பின் விளிம்பில் நிற்கும் புனே அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.
டெல்லி அணி 12 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. மும்பை அணியிடம் 146 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த டெல்லி அணி அதில் இருந்து மீண்டு கடைசி லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை சாய்த்தது. ஸ்ரேயாஸ் அய்யரின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணிக்கு இந்த வெற்றி கிடைத்தது. நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி அணி எப்பொழுது எழுச்சி பெறும் என்பதை கணிக்க முடியாது.
டெல்லிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் புனே அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க புனே அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோய் விட்டதால் டெல்லி அணி நெருக்கடி இல்லாமல் விளையாடும். எனவே இந்த ஆட்டத்தில் அதிரடிக்கு குறைவு இருக்காது.