ஆட்சியை கலைக்கின்ற சூழல் எங்களால் உருவாகாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சேலத்தில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
சேலத்தில் நடைபெற்ற அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தி.மு.க.வின் சதிகளை முறியடித்து அதிமுகவை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா.
எம்.ஜி.,ஆரும் ஜெயலலிதாவும் பல நலத் திட்டங்களை மக்களுக்காக அர்ப்பணித்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சி மலரும். தர்மயுத்தம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தை சி.பி.ஐ,விசாரிக்க வேண்டும் என்பது தான் முக்கிய கோரிக்கை.
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்த போது அவர் அணியில் ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டும் இருந்தார். 122 எம்எல்ஏக்களை வைத்து தத்தி தத்தி ஆட்சியை நடத்தி விடலாம் என நினைக்கின்றனர். கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் சாதனை ஆகாது.
அமைச்சர்களை கட்டுப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தவறிவிட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் கியா மோட்டார் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு சென்றிருக்காது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி எங்களால் கவிழும் சூழல் உருவாகாது. இவ்வாறு அவர் பேசினார்.