பிரிட்டனில் சைபர் தாக்குதல்: தகவல் தொழில்நுட்பம் செயலிழந்ததால் மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் பெருகி வரும் அதே சமயத்தில், சைபர் தாக்குதல்களால் தொழில்நுட்பங்கள் முடங்குவதும் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மின்னணு சாதனங்களில் போதிய பாதுகாப்பு அம்சங்களை பொருத்தி வருகின்றனர். எனினும், சைபர் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் இன்று பெரும்பாலான பகுதியில் தகவல் தொழில்நுட்பம் செயலிழந்தது. இதன் காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, தேசிய சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லண்டன், பிளாக்பர்ன், நாட்டிங்காம், கம்பிரியா மற்றும் ஹெர்ட்போட்ஷைர் ஆகிய பகுதிகளில் மருத்துவ அறக்கட்டளைகள் மற்றும் மருத்துவமனைகள் பாதிப்புக்கு உள்ளாகின.

மருத்துவ சேவை இணையதளங்கள் முடங்கியதால், ஆம்புலன்ஸ்களை குறித்த பகுதிகளுக்கு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. சில மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸ்களை மற்ற மருத்துவமனைகளுக்கு திருப்பி விட்டன.

கம்ப்பூட்டரை ஆன் செய்தால், ‘பிணைத் தொகை கொடுத்தால்தான் உங்கள் கம்ப்யூட்டர்கள் செயல்படும்’ என திரையில் தோன்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.