எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா முன்னணி வேடத்தில் நடித்து வெளியாகிய `பாகுபலி-2′ இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை ரூ.1250 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய சினிமாவிலேயே ரூ.1000 கோடியை தாண்டிய முதல் படம் என்ற பெருமையையும் `பாகுபலி-2′ பெற்றிருந்தது. இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2′-ன் வசூல் ரூ.900 கோடியை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியிருந்த `தங்கல்’ படம், ரூ.1000 கோடியை தாண்டி இந்திய சினிமாவில் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.
அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான `தங்கல்’ சுமார் ரூ.800 கோடியை வசூலித்திருந்த நிலையில், டப் செய்யப்பட்டு கடந்த வாரம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் சீனா மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட இப்படம் வசூலில் அடுத்த மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.
சீனாவில் வெளியாகிய ஒரே வாரத்தில் `தங்கல்’ சுமார் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் மொத்த வசூல் ரூ.1026 கோடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து ரூ.1000 கோடி வசூலை தாண்டிய இரண்டாவது இந்திய படம் என்ற பெருமையை `தங்கல்’ படம் பெற்றுள்ளது.
விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.375 கோடிகளை வசூலித்திருந்தது.