பீட்சா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அடுத்ததாக அவர் இயக்கத்தில் வெளியான‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி பாராட்டுக்களை பெற்றன. இதையடுத்து சிறிய இடைவேளைக்குப் பிறகு, தனது அடுத்த படத்தை இயக்க முடிவு செய்த கார்த்திக் சுப்புராஜ், அப்படத்தில் தனுஷை இயக்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில், தனுஷ்-க்கு பதிலாக அப்படத்தில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் `தேவி’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். இந்நிலையில், ‘யங் மங் சங்’, ‘கொலையுதிர்காலம்’ படத்தின் இந்தி பதிப்பு உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஷால் – கார்த்தி இணைந்து நடிக்க உள்ள `கருப்புராஜா வெள்ளைராஜா’ படத்தையும் இயக்குகிறார்.
இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை ஒப்பந்தமாகி இருந்த நிலையில், கன்னடர்கள் எதிர்ப்பால் இப்படத்தில் இருந்து தான் விலகுவதாக சம்யுக்தா அறிவித்திருந்தார். இதையடுத்து பிரபுதேவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், படக்குழு சார்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாததால் அதற்காக நாம் காத்திருக்கத் தான் வேண்டும்.
இதற்கு முன்னதாக பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா `வில்லு’ படத்தில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் இருந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.