ஆபத்தான புதிய பயங்கரவாத சட்டமூலம்! முக்கிய தீர்மானம்!

அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் இடதுசாரி மற்றும் முற்போக்கு கட்சிகளையும் இணைத்து தேசிய ரீதியில் புதிய பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிராக ஒரு பரந்த எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது என அதன் பேச்சாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை அறிவிக்கும் முகமாக வவுனியாவில் அமைந்துள்ள குறித்த கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதில் அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் கலந்து கொண்டார். இதன்போது மேலும் தெரிவித்ததாவது,

பாராளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மசோதா என புதியதொரு மசோதாவை தாக்கல் செய்வதற்கான வேலைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதனை நாங்கள் எல்லோரும் அறிவோம்.

இந்த புதிய மசோதாவின் உள்ளடக்கம் தற்போது வெளியாகியுள்ளது.இந்த மசோதா ஏற்கனவே 1979 ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டு இன்றுவரை நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை விட மோசமான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது.

இந்த மசோதா சட்டமாக்கப்படுமானால் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை விட மோசமான ஒரு சட்டத்தை தமிழ் மக்கள் மாத்திரமல்ல முழு இலங்கைத்தீவு மக்களுமே எதிர்கொள்ள வேண்டிவரும் என நாங்கள் கருதுகின்றோம்.

2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முள்ளியவாய்கால் யுத்தத்துடன் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக முன்னைய அரசாங்கம் மட்டுமல்ல இந்த அரசாங்கமும் கூறி வருகிறது.

இந்தப் பின்னனியில் தோற்கடிக்கப்பட்ட பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு எதற்காக ஒரு சட்டமூலம் தேவைப்படுகிறது என்பது எங்களது கேள்வி.

இருந்தாலும் அப்படியொரு சட்டத்தை இலங்கை அரசாங்கம் கொண்டு வர விரும்பினால் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீதி நியாயங்களின் அடிப்படையிலும், சட்ட தர்மத்தின் அடிப்படையிலும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

ஆனால், தற்போது கொண்டு வரவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் முதலாவதாக பயங்கரவாதம் தொடர்பான வரைவிலக்கணம் என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதற்கு மாறாக மேலும் பல விடயங்களை உள்ளடக்கி பரந்தும், விரிந்தும் காணப்படுகின்றது.

இரண்டாவதாக பயங்கரவாத எதிர்ப்பு மசோதா சட்டமூலம் சட்டமாக்கப்படுமானால் அதனை நடைமுறைப்படுத்துகின்ற போது அதன் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரஜைகள் தொடர்பிலே, சந்தேக நபர்கள் தொடர்பிலே அவர்களுக்குள்ள ஒரு அடிப்படை உரிமை சட்டத்தரணிகள் உடைய சேவையை உடனடியாக பெற்றுக் கொள்வதாகும். அந்த அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது.

மூன்றாவது இன்னும் பாரதூரமானது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வந்துள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் என்று அழைக்கப்படுகின்ற பாரதூரமான வாக்குமூலங்கள் யாரால் அந்த வாக்குமூலங்கள் கொடுக்கப்பட்டனவோ அவர்களுக்கு எதிரான வழக்கிலேயே அவர்களுக்கு எதிராக அரச தரப்பு சாட்சியமாக கடந்த 1979 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்துப்பட்டு வந்திருக்கின்ற பின்னனியிலே அத்தகைய குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் புதிய மசோதாவின் கீழ் சட்டமாக்கப்படுகின்ற பொழுது பதிவு செய்யப்படுவதற்கும்.

அந்த வாக்குமூலங்களை வழங்குகின்ற சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குகளில் அரசாங்க தரப்பு சான்றாக வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியமாக பயன்படுத்துவதற்கும் புதிய சட்டமூலம் வழிசமைகிறது.

ஆகவே, தான் இந்த சட்டமூலம் எதிர்க்கப்பட வேண்டும். இந்த சட்டமூலம் பயங்கரவாதத்தை தோற்கடிப்பது என்ற பேரிலே புதியதொரு பிரச்சனையை அதாவது சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்பட்டு, நாட்டின் அமைதி குலைக்கப்பட்டு, மீண்டும் அமைதியின்மை இந்த நாட்டிலே தோற்றம் பெறுவதற்கு ஏற்ற ஒரு சூழ் நிலைக்கு வழிசமைப்பதாகவே அமையும்.

இது முழு இலங்கை மக்களும் பாதிக்கக் கூடிய பாராதுராமான தன்மையைக் கொண்டிருக்கிற அதேவேளை எங்களுடைய கடந்த கால அனுபவம் இந்த நாட்டின் சிறுபான்மை மக்களாகிய தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களுடைய உரிமைக் கோரிக்கையை வலியுறுத்த முயற்சிக்கின்ற போது அவர்களுக்கு எதிராக கட்டாயமாக இது பிரயோகிக்கப்படும் என்கின்ற அந்த அச்சத்தை எங்களுக்கு ஏற்படுத்துவதாக தான் அமைந்திருக்கின்றது.

ஆகவே, இது எதிர்க்கப்பட வேண்டும். இதை எதிர்க்க வேண்டிய கடமை ஜனநாயகத்தை நேசிக்கிற ஒவ்வொருவரையும் சார்ந்திருக்கிறது. இந்த நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் எவை எவையெல்லாம் ஜனநாயகத்தை மதிக்கின்றனவோ அத்தனை அரசியல் கட்சிகளும் இந்த சட்ட மூலத்தை எதிர்க்க கடமைப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இந்த நாட்டிலே அடக்கி ஒடுக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு என்ற பேரிலே பல்வேறு விதமான சித்திரவதைகளுக்கும், துன்பங்களுக்கும், கொடூரங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்ற தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் முழு மூச்சாக எதிர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.

அதேபோல் தமிழ் பேசும் சிறுபான்மையினமான எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் அரசியல் நடத்துகிற கட்சிகளுக்கும் அந்த கடமை இருக்கிறது. ஆகவே, தான் நாங்கள் இன்றைய தினம் எங்களது கூட்டத்திலே விவாதித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.

முதல்படியாக இந்த சட்டமூலத்திற்கு எதிராக ஒரு பாரிய பரந்து விரிந்த எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஏதுவாக முதல்கட்டமாக வடக்கு கிழக்கை தளமாக கொண்டு இயங்குகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் இந்தவாரம் கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

அதற்காக ஒரு உபகுழுவை நியமித்து அதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், இரு மாகாண சபை உறுப்பினர் உட்பட 5 பேரை நியமித்து அததற்கான ஏற்பாடுகளை இன்றில் இருந்து செய்ய வேண்டும் என்கின்ற கடமை அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வடக்கு கிழக்கை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மலையகத்தை தளமாக கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகள், முஸ்லிம் மக்கள் மத்தியில் செயற்படும் அரசியல் கட்சிகள் என்பவற்றை இணைத்து அதை விஸ்தரிக்க தீர்மானித்திருக்கிறோம்.

இறுதிக் கட்டத்திலே இந்த நாட்டில் உள்ள இடதுசாரிக்கட்சிகள், முற்போக்கு கட்சிகள், ஜனதா விமுத்தி பெரமுன, நண்பர் விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சி, நண்பர் சிறுதுங்க ஜெயசூரிய அவர்கள் தலைமையிலான அரசியல் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, கொமியுனிட் கட்சி, நண்பர் தினேஸ் குணவர்தனவினுடைய மக்கள் ஐக்கிய முன்னனி உட்பட இதில் அக்கறை காட்டக் கூடிய அத்தனை இடதுசாரிகட்சிகளையும், முற்போக்கு கட்சிகளையும் இணைத்து அகில இலங்கை தழுவிய ரீதியில் ஒரு பரந்த எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அதனை தலைவர்கள் மட்டுமல்ல மக்கள் மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கின்ற மனித உரிமைச் செயற்பாட்டளர்கள், புத்தி ஜீவிகள், சிவில் அமைப்புக்கள், ஊடகங்கள் என அனைவரதும் ஒத்துழைப்பையும் எதிர்பார்கின்றோம்.

இந்த மசோதாவில் உள்ள பாதகமான விடயங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாகரிகமான ஒரு வடிவத்தை கொண்டதாக மாற்ற அனைவரதும் ஒத்துழைப்பையும் கேட்டு நிற்கின்றோம் எனத் தெரிவித்தார்.