மாலபே தனியார் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைக்க வேண்டாம் : அரசாங்கம் அறிவிப்பு!

புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என மாலபே தனியார் கல்லூரிக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாலபே தனியார் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களை அமுல்படுத்தும் வரையில் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என கோரப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு அவர் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சின் ஊடாக அரசாங்கம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மாலபே தனியார் மருத்துவ கல்லூரி இந்தக் கோரிக்கைக்கு சாதகமான பதிலளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு முதலீடு செய்யும் நிறுவனங்கள் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் கல்வி மற்றும் நிர்வாகத்திற்காக உயர் தரத்தைக் கொண்ட கட்டுப்பாட்டுச் சபையை உருவாக்குதல்.

நெவில் பெர்னாண்டோ போதான வைத்தியசாலையை அரசாங்கம் உள்வாங்குதல்.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில்களை அதிகரித்தல் உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலை விரைவில் அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.