மேற்கு வங்க காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நீதிபதி கர்ணன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த கர்ணன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது தலைமை நீதிபதி உட்பட 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதனால் அவர் கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு ஊழல் பட்டியலை அனுப்பி வைத்தார். இதனால் கர்ணன் மீது உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்ததால் கர்ணனை கைது செய்ய மேற்கு வங்க டி.ஜி.பி, மற்றும் கூடுதல் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் சென்னை வந்தனர். இதையடுத்து நீதிபதி கர்ணன் தலைமறைவானார்.
அவரது மொபைல் போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது. உறவினர் வீடுகளில், தேடுதல் நடத்தியும் பலன் இல்லை. இதனால் மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் தமிழக உளவு பொலிசாரின் உதவியை நாடி உள்ளனர்.
தற்போது, நீதிபதி கர்ணனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் பட்டியலை தயாரித்து அவர்களது வீடுகளில் பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீதிபதி கர்ணன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன் சரணடைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மேற்கு வங்கம் மற்றும் சென்னை பொலிசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.