அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடாது: வெங்கையா நாயுடு

2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள மத்திய மந்திரி வெங்கையாநாயுடு நேற்று காலை தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்தார். அங்கு மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கட்சியை பலப்படுத்துவது, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து மத்தியமந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

லஞ்சம், ஊழல் இல்லாமல் 3 ஆண்டுகளை மத்திய அரசு நிறைவு செய்து இருக்கிறது. ஏழை மக்களின் நண்பராக மோடி திகழ்கிறார். ஊழலற்ற ஆட்சியை அமைக்க முடியும் என்பதை அவர் நிரூபித்து இருக்கிறார். தமிழ்நாடு வளர்ந்து வரும் மாநிலம். இங்கு விவசாயிகள் பிரச்சினை பெரியதாக உள்ளது. தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு நிச்சயம் செய்யும்.

பா.ஜ.க.வின் கைப்பாவையாக அ.தி.மு.க. இருந்து வருவதாக தி.மு.க. கூறுவது தரம் தாழ்ந்த அரசியல். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தி.மு.க. என்ன காங்கிரசின் கைப்பாவையாக இருந்ததா?. அ.தி.மு.க. உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடாது. நாங்கள் அ.தி.மு.க.வின் எந்த அணியுடனும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்திற்கு உடனடியாக தேர்தல் வர வேண்டும் என்பது தேவையற்றது.

மத்தியில் நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன், பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறோம். எனவே ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வருமானவரி சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.