நம் உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது: ஆரி வருத்தம்

அன்னையர் தினத்தை முன்னிட்டு தன் அன்னையின் நினைவாக பள்ளிகரணையில் உள்ள ‘இதய வாசல்’ முதியோர் இல்லத்தில் அவர்களுக்கு மதிய  உணவு வழங்கி அவர்களுடன் நடிகர் ஆரி உணவு உண்டார். பின்னர், ‘இயற்கை’ உரங்களின் மூலம் காய்கறி தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

இதுகுறித்து ஆரி கூறும்போது, நான் சென்ற வருடம் அன்னையோடு இருந்தேன். ஆனால் இந்த வருடம் என் அன்னை என்னை விட்டு சென்று விட்டார். இளைஞர்களே தாய் தந்தையை அனாதையாக விட்டு விடாதீர்கள். அவர்கள் நம் பெற்றோர்கள் என உருக்கமாக பேசினார்.

மேலும் எல்லோரும் இயற்கை உணவு சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பெப்சி கோக் பொவண்டோ போன்ற அனைத்து குளிர்பானங்களையும் தவிர்த்து எதிர்த்து குரல் கொடுங்கள். இயற்கையான மோர், இளநீர், கரும்பு சாரு, நொங்கு, எலுமிச்சை பழ நீர் மற்றும் இஞ்சி டீ, லெமன் டீ போன்றவற்றை அருந்துங்கள்.

நாகரீகம் என்ற பெயரில் விருந்தினர்களுக்கு நச்சு கலந்த குளிர்பானங்கள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். எல்லா உணவு வகைகளிலும் நச்சு பொருட்கள் கலந்து விட்டது. எனவே இயற்கை உரங்களின் மூலம் காய்கறிகளை நம் வீட்டு மொட்டை மாடியில் தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை இன்று இந்த முதியோர் இல்லத்தில் அறிவிக்கிறேன். இந்த இல்லத்தில் இருந்தே துவங்க உள்ளோம்.

இதனால் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் இல்லாதவர்களும் ஆரோக்கிய உணவை உண்ண வேண்டும். இப்படி நம் வீட்டுற்கு மட்டுமாவது இயற்கை உணவை நாமே உற்பத்தி செய்யவேண்டும். இந்த திட்டத்தை முதியோர் இல்லத்தில் துவங்க காரணம், இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இல்லாதவர்களுக்கும் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்றுதான்.

மேலும் சென்னையில் உள்ள அனைத்து முதியோர் மற்றும் ஆதரவற்ற இல்லத்திலும் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் எல்லா குடியிருப்பு பகுதியிலும் இத்திட்டம் தொடர ஊக்கப்படுத்துவோம். கீழ்க்கண்ட ஆறு உணவு வகைகளில் மாற்றம் வேண்டும்.

  • பாலீஷ் போட்ட அரிசி தவிருங்கள். பட்டை தீட்டாத அரிசியை பயன்படுத்துங்கள்
  • பாக்கட் பால் தவிருங்கள். நல்ல இயற்கையான பாலை அதன் தயிர் மோர் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
  • செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துங்கள்.
  • வெள்ளை சக்கரையை தவிர்த்து பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி, நாட்டு சக்கரை, தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
  • மைதாவை தவிருங்கள்.
  • கல் உப்பை மட்டுமே பயன்படுத்துங்கள்.

இப்படி நாம் உண்ணும் உணவில் மாற்றமே நம் ஆரோக்கியத்திற்கான மாற்றம்.

இவ்வாறு அவர் கூறினார்.