பிரசவத்தில் போது பெண்கள் மரணமடைவதற்கான பொதுவான காரணங்கள்

பிரசவ காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு ஜென்மம். ஏனெனில் சில பெண்கள் பிரசவத்தின் போது, தான் இதுவரை சுமந்த குழந்தையைக் கூட காண முடியாமல் தங்கள் உயிரையே இழக்கின்றனர். இப்படி பிரசவத்தின் போது பெண்கள் உயிரை இழப்பதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன.

சில நேரங்களில் பிரசவத்தின் போது, கர்ப்பிணியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தால், பிறக்கும் குழந்தை கூட இறக்கும் வாய்ப்புள்ளது. தற்போதைய மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், பிரசவத்தின் போது பெண்கள் இறக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் கர்ப்பிணிகள் இருப்பது நல்லது தானே!

இங்கு பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கான சில பொதுவான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கு உயர் இரத்த அழுத்தம் ஓர் காரணமாகும். கர்ப்பிணிப் பெண் ஏற்கனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டிருந்தால், அப்பெண் இறப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே பிரசவத்தின் போது பெண்களின் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்நிலையில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை பெண்கள் கொண்டிருந்தால், ஆரம்பத்திலேயே உயர் அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டியது மிகவும் முக்கியம்.

பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கு மற்றொரு காரணம் அதிக இரத்தப்போக்கு. இந்த நிலையில், பிரசவத்திற்குப் பின் பெண்களின் உடலினுள் இரத்தக்கசிவு அதிகம் ஏற்படும். இப்படி ஏற்படும் இரத்தக்கசிவு நிற்காமல் இருந்தாலோ அல்லது உடனே மருத்துவரின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் இருந்தாலோ, இரத்தக்கசிவு அளவுக்கு அதிகமாகி, உறுப்புகள் செயலிழந்து, இறப்பிற்கு வழிவகுத்துவிடும்.

பிரசவத்தின் போது பெண்கள் இறப்பதற்கு கருப்பை பிளவும் ஓர் காரணமாகும். பிரசவத்தின் போது, யோனியின் வழியே குழந்தையை வெளியே தள்ளுவதற்கு பெண்களின் கருப்பையில் தீவிரமாக சுருங்கும். சில நேரங்களில், இந்த சுருக்கங்கள் மிகவும் அதிகமாகும் போது, கருப்பை பிளவு ஏற்பட்டு, சொல்ல முடியாத அளவில் இரத்தப்போக்கின் காரணமாக பெண்கள் இறக்க நேரிடும்.

ஆகவே கர்ப்பிணிகளே, மாதந்தோறும் தவறாமல் மருத்துவரை அணுகி உடல் மற்றும் குழந்தையின் வளர்ச்சியை பரிசோதித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமான மனநிலையில் இருந்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வாருங்கள். எந்த சிறு வலியோ, அசௌகரியமோ இருந்தால் கைமருத்துவம் பார்க்காமல் உடனடியாக மருந்துவரை பார்ப்பது நல்லது.

மேலும் உங்களின் உடல் நிலை குறித்த அனைத்து தகவல்களையும் அதாவது நோய், அலர்ஜி போன்றவற்றை மருத்துவரிடம் மறைக்காமல் சொல்லி விடுவது மிகவும் நல்லது. அப்போது தான் மருத்துவர் உங்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் மருத்துவம் பார்க்க முடியும்.