உங்களுடைய வெற்றிக்கு பலருடைய பங்களிப்பு இருக்கலாம். ஆனால், உங்களுடைய தோல்விக்கு நீங்கள் மட்டுமே முழு பொறுப்பாக முடியும். மற்றவர்கள் மீது குற்றம் சாட்டி தோல்விக்கான காரணத்தை நியாயப்படுத்த முடியாது. ‘நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்’ என்று மற்றவர்கள் மீது பழி போடுவது ஏற்புடையதல்ல. ஒருவருடன் பழகும்போதே அவரின் சுபாவத்தை அறிந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும். தவறான நபர்களுடன் பழகிவிட்டு அவர்கள் மீது பழியை போடுவது நியாயமாகாது.
உங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் பொறுப்பாக முடியும். மற்றவர்களை பின்பற்றி வாழ முயற்சிப்பது வாழ்க்கைக்கு உயர்வு சேர்க்காது. அது உங்களின் தனித்தன்மையையும், சுய மதிப்பையும் இழக்க செய்துவிடும். எல்லா விஷயங்களையும் அவர்களை சார்ந்தே இயங்க வேண்டியிருக்கும். ஏதேனும் தவறு நேர்ந்தால் அது உங்கள் வாழ்க்கையைத்தான் கடுமையாக பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வெற்றி, தோல்வி, ஏற்றத்தாழ்வு எல்லாம் நிறைந்ததுதான் வாழ்க்கை. தோல்வியும், ஏமாற்றமும் மனதில் பலவித தாக்கங்களை ஏற்படுத்தும். அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்றிருக்கவேண்டும். இல்லறத்தை இனிமையாக வழிநடத்தி செல்வது கணவன்-மனைவி இருவரின் கையில்தான் இருக்கிறது. அங்கு உறவுகளின் தலையீடுகளுக்கு ஒருபோதும் இடம் கொடுத்து விடக்கூடாது. அதற்காக உறவினர்களின் ஆலோசனையை கேட்பதில் தவறில்லை. அவர்களின் வாழ்க்கை அனுபவம் உங்கள் உறவை செம்மைப்படுத்த வழிவகுக்கும்.
இருப்பினும் இரு தரப்பு உறவினர்களிடமும் தங்கள் மகன், மகள் வாழ்க்கை நல்லவிதமாக அமைய வேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருக்கும். அதுவே அவர்களின் போதனையில் வெளிப்படக்கூடும். அதை கேட்டு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ள கூடாது. தம்பதியர் இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசியும், விட்டுக்கொடுத்தும் வாழ பழகிக்கொள்ளக் வேண்டும். ஏதேனும் ஏமாற்றத்தையோ, இழப்பையோ சந்தித்தால் அது இருவரையும்தான் பாதிக்கும் என்பதை மனதில் கொண்டு வாழ வேண்டும்.