அரசியல் ஆதாயத்திற்காகவா ரஜினியை சந்தித்தேன்…. ஆடிப்போன கங்கை அமரன்!

ஆர்.கே. நகர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது கங்கை அமரன் ரஜினியை நேரில் சந்தித்தார். இது அரசியல் ஆதாயத்திற்கான சந்திப்பில்லை என்று ரஜினிக்கு தெரியும் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது ‘ஆதாயத்திற்காக சிலர் அணுகும் போது ஆதரிப்பதில்லை’ என்று கூறினார். இது குறித்து இமையமைப்பாளர் கங்கை அமரன் கூறியதாவது,

ரஜினியை நம்பி இருக்கக் கூடிய ரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார். ஒரு பிரபலமான மனிதர் சுத்தமாக இருக்க விரும்புவது தவறு இல்லை. ஆன்மீகம் கலந்த ஒரு அரசியல்வாதி வேண்டும். அவர் அரசியலுக்கு வருவது போல்தான் அவரது பேச்சு உள்ளது.

லாபத்தை எதிர்ப்பார்ப்பவர்கள் வர வேண்டாம் என்று ரஜினி சொல்லி இருக்கிறார். இது சூசகமாக, மறைமுகமாக அரசியலுக்கு அவர் வரப்போவதற்கான அறிகுறி. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். என் அருமை நண்பர் அரசியல் பிரவேசத்திற்கு என் வாழ்த்துகள்.

பாஜகவில் ரஜினி சேருவாரா என்பது குறித்து இப்போது பேச வேண்டியது இல்லை. அவர் தனது வாழ்வில், இந்த தமிழகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாஜகவில் நான் சேர்ந்து வேட்பாளராக நின்ற போது என்னை அழைத்து ரஜினி பாராட்டினார். அரசியல் பற்றி பல விஷயங்களை பேசினார். அவரே இப்போது அரசியலுக்கு வந்தார் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆர். கே. நகர் தொகுதியில் வேட்பாளராக நின்ற போது, நான் ரஜினியை சந்தித்தது அரசியல் ஆதாயத்திற்காக அல்ல என்பது ரஜினிக்கு தெரியும். சந்திப்பின் போது எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நானும் அவரிடம் கேட்கவில்லை என்று கங்கை அமரன் கூறினார்.