ரஜினி அரசியல் பிரவேசத்தின் முதல் அட்டாக்… முதலைகள்னு சொன்னது திமுகவைத்தானாம்!

ரஜினி நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ அரசியலில் ‘களமிறக்கப்படுகிறார்’… இதற்கு முன்னோட்டமாகவே திமுகவை மறைமுகமாக ‘முதலைகள்’ என விமர்சித்ததாக பரபர தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த் வழக்கம் போல தமது புதிய படம் வெளியாகும் நிலையில் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இச்சந்திப்பை முதலில் படத்தை ஓடவைக்க மட்டும்தான் என திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில்தான் ரஜினியை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவிக்கப் போகிறது என ஒரு தகவல் பரவியது. மேலும் பாஜகவில் ரஜினி இணைய நெருக்கடி தரப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த குழப்பத்தில்தான் தமது ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் ரத்து செய்தார். அப்போது நடிகர் கமல்ஹாசன் உட்பட பலரும் பாஜகவில் நேரடியாக சேர வேண்டாம் என ரஜினிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

ரஜினிகாந்தும் ‘சாணக்யரின்’ இடத்தில் இருப்பவர் உள்ளிட்ட பலரிடமும் படுதீவிரமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனையில் 2 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது பாஜகவை ரஜினிகாந்த் நேரடியாக ஆதரித்தால் அவரது இமேஜ் பாதிக்கப்படும். அதனால் அப்படி எடுத்த எடுப்பிலேயே பேசாமல் தவிர்ப்பது; இரண்டாவது தமிழக அரசியல் கட்சிகளை பாஜகவின் குரலில் விமர்சிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த அஜெண்டாபடியே தமிழக அரசியல் கட்சிகளை மறைமுகமாக ரஜினிகாந்த் இன்று விமர்சித்து பேசியிருந்தார். அதிலும் 1996-ம் ஆண்டு தாம் அரசியல் பேசநேரிட்டது ‘விபத்து’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

அதேபோல் அரசியலில் முதலைகள் இருப்பதாகவும் ரஜினிகாந்த் சாடியிருந்தார். அதாவது முதலைகள் என ரஜினிகாந்த் சாடியது திமுகவைத்தானாம்… அரசியல் விபத்து என சொன்னது மூப்பனாரின் தமாகாவுக்கான ஆதரவைத்தானாம். ரஜினியின் இந்த பேச்சால் பாஜக முகாம் படு உற்சாகத்தில் இருக்கிறதாம்.