சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு வந்தாலும் பணத்துக்காக சேரும் கூட்டத்தை என்னுடன் சேர்த்து கொள்ள மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்து கொள்ளவுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசுகையில், கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் விபத்து எனக்கு நடந்தது, ஒரு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
என்னுடைய ரசிகர்களும், வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களும் முழு ஆதரவை கொடுத்து அந்த கூட்டணியை ஜெயிக்க வைத்தார்கள்.
அப்போதிலிருந்தே அரசியலில் என் பெயர் அடிபட ஆரம்பித்துவிட்டது, என்னுடைய ரசிகர்களில் சில பேர் அரசியல் ஆதாயத்துக்காக என் பெயரை பயன்படுத்த தொடங்கிவிட்டனர், பணமும் சம்பாதித்து விட்டனர்.
பூனை ருசி கண்ட மாதிரி அடுத்தடுத்த தேர்தல்களிலும் இதையே செய்யத் தொடங்கினர், இதன் காரணமாகவே நான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என கூறவேண்டிய கட்டாய சூழல் உருவானது.
ஆண்டவன் இயக்கும் கருவி தான் நான், என்ன பொறுப்பு கொடுத்தாலும் நியாயமாக, சத்தியமாக செயல்படுவேன்.
சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு வந்தாலும் பணத்துக்காக சேரும் கூட்டத்தை என்னுடன் சேர்த்து கொள்ள மாட்டேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.