இரண்டு விக்னேஸ்வரன்களும் கடமைகளைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்!!

வடக்கில் முக்கிய பதவிகளை வகிக்கும் இரண்டு விக்னேஸ்வரன்களும் தங்களது கடமைகளைச் சரியாகவும், நேர்த்தியாகவும் செய்ய வேண்டும் என நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரனுக்குப் பாராட்டு விழா இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆசிச் செய்தி வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் இருக்கின்றார். அதேபோல் வடக்கு மாகாண மக்களின் கல்விச் சொத்தான யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர்.விக்னேஸ்வரன் இருக்கின்றார்.

2 பதவிகளுமே தமிழ் மக்களுக்கு முக்கிய விடயமாகும். ஆகவே, 2 விக்னேஸ்வரன்களும் தமிழ் மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் தமது பணிகளைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

யாழ். பல்கலைக்கழக செயற்பாட்டை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலையில் யாழ். பல்கலைக்கழகம் முக்கியமான கட்டத்தில் இருக்கின்றது.

அதனை சீரான பாதையில் பயணிக்க வைக்க வேண்டிய முக்கிய பொறுப்பை புதிய துணைவேந்தர் பொறுப்பேற்றுள்ளார். அதனை அவர் சிறப்பாகப் பயணிக்க வைக்க அவருக்கு இறைவன் அருள்புரிவானாக என தெரிவித்தார்.

இதன்போது பேராசிரியர் வ.மகேஸ்வரன் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணம் ஒருகால கட்டத்தில் கல்வி வளர்ச்சியில் ‘நாங்கள் தான் முதலாம் இடத்தில் இருக்கின்றோம்’ என மார்பில் தட்டிச் சொல்லும் நிலைமை இருந்தது.

ஆனால், அது அனைத்தும் தலைகீழாக மாறி 9 மாகாணங்களிலும் எமது மாகாணமே கடைசி நிலையில் இருக்கின்றது. இந்த நிலையை பாடசாலை மட்டத்தில் மட்டும் அல்லாது பல்கலைக்கழக மட்டத்திலும் மாற்றியமைத்து எமது மாகாணத்தின் கல்வி வளர்ச்சியை உயர்த்த வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருக்கின்றது.

எங்களைப் பார்த்து பின்பற்றிய காலம் போய், எங்களை அவமானப்படுத்துகின்ற காலம் காணப்படுகின்றது. எனவே, இவற்றை மாற்ற துணைவேந்தரும், சமூக ஆர்வலர்களும் முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.