அடுத்த மே தினத்துக்குள் அரசைக் கவிழ்ப்போம் : மஹிந்த அணி உறுதி

இந்த அரசு அடுத்த வருட மே தினத்துக்கு முன்னர் கவிழ்க்கப்படும் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மஹிந்த அணியின் அடுத்த நகர்வு பற்றி தமிழ் ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த அரசு எந்தவொரு அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுப்பதில்லை. மஹிந்த ஆரம்பித்து வைத்த வேலைத்திட்டங்களை மீள அங்குரார்ப்பணம் செய்து புதிய வேலைத்திட்டங்கள் போல் காட்டிக்கொள்கின்றது என்றும் கூறியுள்ளார்.

கண்டி அதிவேகப் பாதை நிர்மாணம் இதற்கு சிறந்த உதாரணமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசால் புதிதாகத் தொடங்கப்பட்டது என்று எதுவுமில்லை. ஆகக் குறைந்தது ஒரு மலசலகூடத்தையேனும் மக்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்கவில்லை.

ஆட்சி அமைந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்த இரண்டு வருடங்களையும் வெறுமனே கடத்திய அரசு மீதிக் காலத்தையும் அவ்வாறுதான் கடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடந்தால் அது நாட்டுக்குப் பெரும் ஆபத்தாக அமைந்துவிடும். இனியும் இந்த ஆட்சி தொடர்வதை அனுமதிக்க முடியாது.

இந்த மே தினக் கூட்டம் அரசுக்கு ஒரு செய்தியைக் கூறியுள்ளது. ஆட்சி அதிகாரத்தைக் கைகளில் வைத்துள்ள இரண்டு கட்சிகளின் மே தினக் கூட்டங்களுக்கு

வந்த மக்களின் எண்ணிக்கையை விடவும் எதிர்க்கட்சியான எங்களது கூட்டத்துக்கு வந்த மக்களின் எண்ணிக்கை அதிகம்.

மக்கள் அரசுக்கு வழங்கிய மக்கள் ஆணை முடிந்துள்ளதை எமது மே தினக் கூட்டத்துக்கு வந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பின்னரும் அரசால் தொடர்ந்து பயணிக்க முடியாது. அடுத்த வருட மே தினத்துக்குள் இந்த அரசைக் கவிழ்ப்போம். புது ஆட்சியை உருவாக்குவோம் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, அரசு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலுக்கு சென்றால் உண்மை நிலை விளங்கும். அத்தோடு அரசின் ஆட்டம் அடங்கிவிடும்.

இந்த அரசு தாம் தோற்பது நிச்சயம் என்று உணர்ந்துள்ளதால்தான் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கின்றது எனவும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.