மஹிந்த அணியுடன் இரகசியப் பேச்சு இல்லை

வட மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்கு எவ்விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது என குறித்த மாகாண சபையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.

ஆட்சியைக் கவிழ்ப்பது தொடர்பில் பொது எதிரணியினர் எம்முடன் பேச்சு நடத்தவில்லை.

அவ்வாறு நடத்தினாலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாது என்றும் வட மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அனில் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

வட மத்தியமாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மஹிந்த அணியிலுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர்களுடன் முன்னாள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவசர சந்திப்பை நடத்தியுள்ளதால் இது விடயம் தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் தமக்கு ஆதரவு வழங்குவர் என்று மாகாண சபையிலுள்ள மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

மஹிந்தவுக்கு சார்பாக செயற்பட்டு வந்த வட மத்திய மாகாண அமைச்சர் கே.எச்.நந்தசேனவை தூக்கிவிட்டு, அப்பதவிக்கு மாகாணசபை உறுப்பினர் எம். ஹேரத் பண்டாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் நியமித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிலடிகொடுக்கும் வகையில் மஹிந்தவுக்குச் சார்பாகச் செயற்பட்டு வந்த குறித்த மாகாண சபையின் மற்றுமோர் அமைச்சரான எஸ்.எம்.ரஞ்சித் தனது அமைச்சுப் பதவியைத் துறந்தார்.

இதனால் வட மத்திய மாகாண சபையின் அரசியல் களம் ஆட்டம்காண ஆரம்பித்துள்ளது.

வட மத்திய மாகாணத்தில் மொத்தமாக 33 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பான்மை பலம் எம்பக்கமே இருக்கின்றது.

ஏனைய சிலரும் விரைவில் இணையவுள்ளனர். இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் மாற்ற ஒன்றை ஏற்படுத்த முயற்சிப்போம். அதுவரை சுயாதீன குழுவாக செயற்படவுள்யோம் என்றும் மஹிந்த அணியினர் குறிப்பிட்டுள்ளனர்.

எது எப்படியோ வட மத்திய மாகாண சபையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றது.

எதிர்வரும் 23 ஆம் திகதி வட மத்திய மாகாண சபை அமர்வு இடம்பெறவுள்ளது. அதற்குள் அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக மஹிந்தவுக்கு சார்பாகச் செயற்படும் மற்றுமொரு மாகாண அமைச்சரும் பதவியிலிருந்து தூக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் 8 ஆம் திகதி நடைபெற்ற வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 21 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக்கட்சி 11 ஆசனங்களையும், ஜே.வி.பி. ஒரு ஆசனத்தையும் கைப்பறியமை குறிப்பிடத்தக்கது.