அரசியலுக்கு முழுக்கு? வைகோ திடீர் ஆலோசனை

தேச துரோக வழக்கில் சிறையில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள ஆலோசித்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என முறையிட்ட வைகோ, தம்மை சிறையில் அடைக்கவும் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து யூன் 2 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ தற்போது தமது எதிர்கால அரசியல் வாழ்க்கை குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி மதிமுகவை தொடர்ந்து கட்சியாக நடத்துவதா அல்லது இயக்கமாக மாற்றிவிடலாமா எனவும் வைகோ தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல் அரசியலை தவிர்த்துவிட்டு பெரியார் போல இயக்கத்தை நடத்தலாமா என்றும் தன்னை சிறையில் சந்தித்த நெருக்கமான தலைமை நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி இருக்கிறார் வைகோ.

இருப்பினும் வைகோவை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனுடன் வைகோ நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

அதில், மக்கள் நலக் கூட்டணி அமைப்பதற்காக ஜெயலலிதாவிடம் இருந்து 1200 கோடி வாங்கியதாக மக்கள் பேசுவதாகவும், இந்த விவகாரம் மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு. வெளியில வரவே பிடிக்கலை. அதனால்தான் உள்ளேயே இருந்து நிறைய படிக்கிறேன். அடுத்த கட்டம் குறித்து ஆலோசனையில் இருப்பதாகவும் முத்தரசனிடம் மனம் விட்டுப் பேசியதாக தகவல் கசிந்துள்ளது.