நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 5 நாட்கள் ரசிகர்களுடனான இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று அவர் ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் கூட சேர்க்கமாட்டேன் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறினார்.
இதனையடுத்து ரஜினிகாந்தின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக தலைவர்கள் உடனடியாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவதை மற்ற தலைவர்களை போலவே நானும் வரவேற்கிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறுகையில், “ரஜினி அரசியலுக்கு வருவதை ரசிகர்கள் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்தினை சொல்ல விரும்பவில்லை.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத வக்கற்ற ஆட்சியை அதிமுக நடத்தி வருகிறது. மத்திய அரசுக்கு தமிழக அரசு பயந்து நடுங்கி ஒடுங்கி இருக்கிறது” என்றார்.