சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த கர்ணன் கடந்த ஆண்டு 20 நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனால் அவரை மேற்கு வங்க ஐகோர்ட்டு நீதிபதியாக இடமாற்றம் செய்தனர்.
இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கர்ணன் கடிதம் எழுதினார். இதனால் நீதிபதி கர்ணன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கும், நீதிபதி கர்ணனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 8 பேருக்கு எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின்கீழ் தலா 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிபதி கர்ணன் அறிவித்தார். இதையடுத்து நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது.
கர்ணனை உடனே கைது செய்து சிறையில் அடைக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேற்கு வங்க போலீசார் இதுதொடர்பான நடவடிக்கைகளை தொடங்கும் முன்பு நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து விட்டார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த கர்ணனை கைது செய்ய போலீசார் முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிய வில்லை.
இதற்கிடையே நீதிபதி கர்ணன், தனக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். அதில் அவர் தனது தண்டனையை மறு ஆய்வு செய்ய கோரிக்கை விடுத்திருந்தார். கைது நடவடிக்கையை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை கடந்த சனிக்கிழமை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், கர்ணன் மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க இயலாது என்று கூறிவிட்டனர். திரும்பபெற இயலாது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) கர்ணன் மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க அவரது வக்கீல் மீண்டும் முறையீடு செய்து கோரிக்கை விடுத்தார். கர்ணனின் அதிகாரங்களை பறித்தது சுப்ரீம் கோர்ட்டு அதிகார வரம்புக்குள் வராது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் இன்றும் கர்ணன் மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதுபற்றி நீதிபதிகள் கூறுகையில், “எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் மனுவை பதிவாளர் பட்டியலிட்டதும் நாங்கள் பெஞ்ச் அமைத்து உத்தர விடுவோம்” என்றனர். இதையடுத்து இந்த விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் மட்டுமே இதுபற்றி விவாதிக்க முடியும். பாராளுமன்றமே அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும் என்று கர்ணன் வக்கீல் கோரிக்கை விடுத்தார். அதையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், இது பற்றி ஊடகங்களில் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்றனர்.
கர்ணனுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத்தண் டனை விவகாரத்தில் உடனே அவரை கைது செய்யும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கைது வாரண்ட் உத்தரவை திரும்பப்பெற இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு தினமும் இது பற்றி முறையீடு செய்தால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இன்று கர்ணனுக்கு சலுகை எதையும் வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் தொடர் அதிரடியில் நீதிபதி கர்ணன் மீதான பிடி மேலும் இறுகியுள்ளது.இதனால் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கு வங்க போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.