உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா நேற்று மீண்டும் ஒரு அணு குண்டு சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக நாடுகள் வடகொரியா உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மிரட்டக் கூடாது என்று ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.
சீனா சென்றுள்ள புதின் பீஜிங் நகரில் இது குறித்து பேசுகையில், “கடந்த சில வாரங்களில் வடகொரியா அணு குண்டு சோதனைகளை நிகழ்த்தி வருவது ஏற்றுக் கொள்ள முடியாது. கொரிய தீபகற்ப பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமைதியான தீர்வு தேவையாக உள்ளது. யார் சொன்னது பேச்சுவார்த்தை நடவடிக்கை தீங்கு மற்றும் ஆபத்தானது என்று?” என்று கூறினார்.
தென் கொரியா அதிபர் தேர்தலில் மூன் ஜே-இன் வெற்றி பெற்றதை அடுத்து சுமூகமான சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மூன் பதவியேற்ற சில நாட்களிலேயே வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியது மீண்டும் குழப்பமாக சூழலை நீடிக்க செய்துள்ளது.