இந்த ஐ.பி.எல். சீசனை மறக்க விரும்புகிறேன்: விராட்கோலி கருத்து

இந்த ஐ.பி.எல். சீசனை மறக்க விரும்புகிறேன் என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி (56-வது) லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. வலுவான அணியாக கருதப்பட்ட விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி லீக் ஆட்டங்கள் முடிவில் 3 வெற்றி, 10 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) 7 புள்ளிகள் பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் 48 ரன்னும் (38 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) கேப்டன் விராட்கோலி 58 ரன்னும் (45 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஜாகீர்கான், ஷபாஸ் நதீம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 151 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ரிஷாப் பான்ட் 45 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 32 ரன்னும், கருண்நாயர் 26 ரன்னும், முகமது ஷமி 21 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பெங்களூரு அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல், பவான் நெகி தலா 3 விக்கெட்டும், டிராவிஸ் ஹெட் 2 விக்கெட்டும், அவேஷ்கான், ஷேன் வாட்சன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 14-வது ஆட்டத்தில் ஆடி 8-வது தோல்வியை சந்தித்த டெல்லி அணி புள்ளி பட்டியலில் 6-வது இடம் பெற்றது.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது. இந்த ஐ.பி.எல். சீசனை மறக்க விரும்புகிறேன். எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. அதனை எங்களது தவறுகளால் வீணடித்தோம். வெற்றியுடன் போட்டியை முடித்தது சிறப்பானதாகும். அடுத்த சீசனில் இப்போது அணியில் உள்ள சில வீரர்களை முடிந்தால் அப்படியே வைத்து கொள்ள விரும்புகிறேன். ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான் ஆகியோர் பந்து வீச்சில் அருமையாக செயல்பட்டனர். அவேஷ் கான் இந்த ஆடுகளத்தில் எதிரணியினருக்கு கொடுத்த நெருக்கடி தரம் வாய்ந்ததாக இருந்தது. ஹர்ஷல் பட்டேல் 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர்கள் அதிக போட்டியில் ஆட முடியாமல் போனது துரதிருஷ்டம். நான் பந்தை அடித்து ஆடிய விதமும், அது அணியின் வெற்றிக்கு உதவியதும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ஜாகீர்கான் கருத்து தெரிவிக்கையில், ‘தோல்வியுடன் இந்த சீசனை முடித்து உள்ளோம். எங்களது ஆட்டத்தை திரும்பி பார்க்கையில் 20 ஓவர் போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் எங்களுக்கு தேவை என்பதை உணருகிறோம். இதுபோன்ற மெதுவான ஆடுகளத்தில் முதலில் அடித்து விளையாட வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.