டோனியை கேப்டனில் இருந்து நீக்க நான் காரணமா?: இல்லவே இல்லை என்கிறார் பிளெமிங்

இந்திய பிரிமீயர் கிரிக்கெட் (ஐ.பி.எல்.) தொடங்கிய (2008) காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் ஸ்டீபன் பிளெமிங். பின்னர் அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். டோனிக்கும் அவருக்கும் நல்ல நெருக்கம் இருந்து வந்தது. இதனால் சென்னை அணி நீக்கப்பட்டபோது, டோனி புனே அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது புனே அணி பிளெமிங்கை பயிற்சியாளராக்கியது. பிளெமிங்கை பயிற்சியாளராக்கியதில் டோனிக்கு முக்கிய பங்கு இருந்ததாக கூறப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணி எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. இதனால் டோனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

டோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதற்கு பயிற்சியாளர் பிளெமிங்கின் பங்கும் இருந்ததாக செய்தி உலா வந்தது. அந்த செய்தியில், “2016 ஐ.பி.எல். தொடரில் 7 போட்டிகளை மிகவும் நெருக்கமாக வந்து தோற்றோம். தோனியால் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க இயலவில்லை, அதனால்தான் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்று பிளெமிங் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பணியாற்றியபோது

டோனியின் நெருக்கமாக இருந்த பிளெமிங்கே டோனியின் கேப்டன் பதவியை நீக்க காரணமாக இருந்துள்ளாரே என்று டோனியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் தான் கூறியதாக வெளிவந்த அந்த செய்தி ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று பிளெமிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “இது மிகவும் முட்டாள்தனமான ஏற்றுக்கொள்ள முடியாத அர்த்தமற்ற செய்தி. டோனி மிகப்பெரிய பினிஷர். குறிப்பாக மிகவும் நெருக்கடியான நிலையில் ஆட்டம் சென்று கொண்டிருக்கும்போது போட்டியை சிறப்பாக பினிஷ் செய்யக்கூடியவர். நான் சொன்னதாக வெளியான செய்தி ஜோடிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.