தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஏபி. டி. வில்லியர்ஸ். 360 டிகிரி என்று அழைக்கப்படும் இவர் ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக விளையாடவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தயாராகி வரும் அவர், இந்திய கிரிக்கெட்டைக் கண்டு பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் “நான் இந்திய கிரிக்கெட்டைப் பார்த்து பயப்படுகிறேன். ஐ.பி.எல். தொடரால் இந்திய கிரிக்கெட் மென்மேலும் வலுவடைந்து கொண்டே வருகிறது. உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய அழுத்தங்கள், நெருக்கடிகளை சவாலுடன் சந்திக்கும் இந்திய இளம் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் மிகப்பெரிய அனுபவம் பெற்று வருகின்றனர்.
வேறு எந்த நாடுகளிலும் இது இல்லை. பிற நாடுகள் மெதுவாகவே முன்னேறி வருகின்றன. அவர்களும் இந்தியாவை எட்டிப்பிடிப்பார்கள். ஆனால் இப்போதைக்கு இந்தியா உச்சத்தில் இருக்கிறது. எப்போதும் சிறந்த இளம் வீரர்கள் வந்த வண்ணமாக உள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இத்தகைய சிறந்த வீரர்கள் கையில் உள்ளது” என்றார்.