ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான நடப்பு சம்பள ஒப்பந்தம் ஜூன் 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
கிரிக்கெட் வாரிய வருவாயில் வீரர்களுக்கான பங்கு தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற அம்சத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்க மறுத்து வருகிறது. புதிய ஊதிய ஒப்பந்தத்துக்கு வீரர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால், ஜூன் 30-ந் தேதிக்கு பிறகு வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்து இருந்தது.
இதனால் வீரர்கள் அனைவரும் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அணி ஆகஸ்டு மாதத்தில் வங்காளதேசம் சென்று 2 டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் தொடங்குகிறது. சம்பள பிரச்சினை நீடித்தால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படாவிட்டால் ஆஷஸ் தொடரில் விளையாடமாட்டோம். ஆஸ்திரேலிய அணிக்கு வீரர்கள் இல்லாத நிலை ஏற்படலாம்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.