தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று இரவு நடந்தது. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காக ஆட்சி நடத்தினார்கள். ஆனால், இன்று ஆட்சியும், கட்சியும் சசிகலா குடும்பத்தின் கையில் சிக்கும் நிலை. அதை தடுக்க வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும். அதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றோம். ஆனால், நீதிவிசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மறுக்கிறது. கட்சியையும், ஆட்சியையும் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முன்வரவில்லை. ஏதேதோ நாடகங்களை நடத்தி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள்.

எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் அவர்களிடம் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், தொண்டர்களும், மக்களும் எங்களிடம் இருக்கிறார்கள். எங்களுடைய 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றாதது ஜெயலலிதாவுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

மக்கள் பிரச்சினைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்று ஜெயலலிதா எங்களுக்கு சொல்லி கொடுத்துள்ளார். ஆனால், தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசு, ஜெயலலிதாவின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசாக இல்லை. எம்.எல்.ஏ.க்கள், மக்கள் தனித்தனியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. அவர்கள் திருந்துவதாக இல்லை.

எங்களுடன் சமாதானம் என்றார்கள். அந்த குடும்பத்தை விலக்கி வைக்க சொன்னோம். இதுவரை அதை செய்யவில்லை. இணைப்புக்காக குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்களை கலைக்க வேண்டும் என்று மதுரையில் ஒருவர் சொல்கிறார். அவர் மேயராக இருக்கும் போது மதுரையிலேயே இருந்தது கிடையாது. அவ்வளவு பிரச்சினைகள். அவரெல்லாம் கருத்து சொல்லும் அளவுக்கு போய்விட்டது.

இணைப்பு இல்லாமல் போனால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. இதற்கிடையே மு.க.ஸ்டாலின் எப்படியும் முதல்-அமைச்சராகி விடவேண்டும் என்று கனவு காண்கிறார். அவருடைய கனவு பலிக்காது.

மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எனவே, எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அவர்கள் டெபாசிட் இழப்பார்கள். தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் கையில் அ.தி.மு.க. சென்று விடாமல் அரணாக நின்று காப்போம். அ.தி.மு.க.வை கட்டிக்காப்பதற்கு எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்ய தயாராகி விட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிசாமி, நிலக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தனர்.

இந்த கூட்டத்தில் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, செம்மலை, க.பாண்டியராஜன், ராஜகண்ணப்பன், ஜெயபால், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.