உலக அளவில் இயற்கை பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றி வருவோருக்கு ‘பசுமை ஆஸ்கர்’ என்று அழைக்கப்படும் ‘விட்லி விருது’ வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பசுமை ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் 166 பேர் இருந்தனர். அவர்களில் 6 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் இந்தியர்கள் ஆவர்.
கர்நாடகாவின் புலிகள் வாழ்விடத்தை பாதுகாப்பதற்கு சிறந்த முறையில் பணியாற்றிய சஞ்சய் குபி, கிரேட்டர் அட்ஜடன்ட் நாரை இனத்தையும் அசாமில் அவை வசிக்கும் நிலப்பகுதியையும் பாதுகாப்பதற்காக முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட நெட்வொர்க்கை உருவாக்கிய பூர்ணிமா பர்மான் ஆகியோருக்கு பசுமை ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
லண்டனில் நாளை நடைபெறும் விழாவில், விருதுகளை இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மகளான இளவரசி ஆன் வழங்க உள்ளார். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரொக்கப்பரிசாக தலா 35 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகளும் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 29 லட்சம்) நினைவுப்பரிசுகளும் வழங்கப்படும்.