திருமண தடை நீக்கும் நித்திய கல்யாணப் பெருமாள்

எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள். எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை இடப் பாகத்தில் கொண்டுள்ளதால் திருவிடவெந்தை எனப் பெயர் பெற்றது. அதுவே திருவிடந்தை என்று மறுவியது. பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில். ஆனால், தொன்மை கீர்த்தியில் ஈடு இணையற்ற தலம்.

உற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்திருக்கிறது. எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது. தனிக்கோயில் கொண்டுள்ள தாயாரின் திருப்பெயர் கோமளவல்லித் தாயார் என்பதாகும். அருளும், அழகும் ஒருசேர வீற்றிருந்து செல்வ வளத்தை பெருக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார். திருமணத்திற்கான பரிகாரம் இத்தலத்தில் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்று பார்ப்போம்.

திருமணமாகாத ஆணோ, பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராகரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோவிலை வலம் வரவேண்டும்.

திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராகரை சேவித்து செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும் முன்பே திருமணம் நிச்சயமாகிவிடுவது சகஜமானது. இந்த ஆலயத்திற்கு திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், வெகுவிரையில் மணமுடித்து வந்து மீண்டும் இறைவனை வழிபடுவதை இன்றும் கண்கூடாகக் காணலாம்.

சென்னை- மாமல்லபுரம் பாதையில் 42 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருவிடந்தை.