ஐ.பி.எல். போட்டியில் புனே அணி 20 ரன்னில் மும்பையை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. மனோஜ் திவாரி 48 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ரகானே 43 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), டோனி 26 பந்தில் 40 ரன்னும் (5 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் புனே அணி 20 ரன்னில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பார்த்தீவ் பட்டேல் அதிகபட்சமாக 40 பந்தில் 52 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். சென்னையை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். தாக்கூர் 3 விக்கெட் சாய்த்தார்.
கடைசி நேரத்தில் டோனியின் அதிரடியான ஆட்டமும், வாஷிங்டன் சுந்தரின் அபார பந்து வீச்சும் புனே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
இறுதிப்போட்டிக்கு நுழைந்தது குறித்து புனே அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியதாவது:-
இந்த ஐ.பி.எல். தொடரில் நாங்கள் 3 முறை மும்பை இந்தியன்சை வீழ்த்தி உள்ளோம். இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கான இந்த ஆட்டம் முக்கியமானது. முன்னணி வீரர்கள் சிலர் விலகி இருந்தனர்.
160 ரன்னுக்கு மேல் குவித்தது. டோனியின் அதிரடியான ஆட்டம் இதில் முக்கியத்துவம் பெற்றது. அவர் ஒரு அற்புதமான வீரர். கடைசி கட்டத்தில் அவர் மிகவும் சிறப்பாக ஆடினார். மனோஜ் திவாரி, ரகானே ஆகியோரது பேட்டிங்கும் அபாரமாக இருந்தது.
பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்பட்டுள்ளேன். நாங்கள் திட்டமிட்டு செயல்படுத்தி மும்பை அணியை கட்டுப்படுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-
163 ரன் இலக்கு எளிதாக எடுக்க கூடியதே. இந்த சீசனில் எங்களது மோசமான பேட்டிங்காக இது இருந்தது. போதுமான அளவு ரன்களை எடுக்கக்கூடிய சிறந்த ஜோடி அமையவில்லை. மிடில் ஓவரில் புனே அணி சிறப்பாக பந்துவீசி எங்களது விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மும்பை அணியின் கதை இதோடு முடிந்துவிடவில்லை. இறுதிப்போட்டியில் நுழைய இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.