ஆடுகளம் குறித்து வார்னர் அதிருப்தி: பந்து வீச்சாளர்களுக்கு காம்பீர் பாராட்டு

கொல்கத்தா அணியின் வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் காம்பீர் கூறியதாவது:-

பந்து வீச்சாளர்களின் பணி மிகவும் சிறப்பாக இருந்தது. 128 ரன்னுக்குள் ஐதராபாத் அணியை கட்டுப்படுத்தியது அற்புதமானது. பவுலர்களுக்குத்தான் பாராட்டு எல்லாம் சேரும். நம்ப முடியாத வகையில் மிகவும் அபாரமாக வீசினார்கள். இதனால் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வர முடிந்தது.

இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சவாலாக இருந்தது. 160 ரன் குவித்து இருந்தால் சிறந்த ஸ்கோராக இருந்து இருக்கும். சிறிய இலக்கில் 3 விக்கெட் போனது சிறிய ஏமாற்றம். ஆனாலும் பொறுப்புடன் ஆடி இருக்கிறோம்.

கடந்த ஐ.பி.எல். போட்டியில் எலிமினேட்டரில் நாங்கள் ஐதராபாத்திடம் தோற்றோம். இதற்கு தற்போது பதிலடி கொடுத்து வெளியேற்றி இருக்கிறோம். மும்பை இந்தியன்சுடன் இதே ஆடுகளத்தில் ‘குவாலிபையர்-2’ ஆட்டத்தில் நாளை சந்திக்கிறோம். அந்த அணிக்கு எதிராக எங்களது சாதனைகள் சிறப்பாக இருந்தது இல்லை. ஆனாலும் மும்பைக்கு எதிராக நன்றாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் கூறியதாவது:-

நாங்கள் 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிது அல்ல. இந்த ஆடுகளம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அனைத்து ஐ.பி.எல். சீசனிலும் இந்த ஆடுகளம் உகந்ததாக இல்லை. மழையால் போட்டி பாதிக்கப்பட்டு 6 ஓவருக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 6 ஓவரை வைத்து வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய சவாலே. கொல்கத்தாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

ஐதராபாத் அணிக்கு ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.