தடுப்பு காவலில் இருக்கும் ஆண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

இலங்கையில், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நிறுத்தப்படவில்லை என All Survivors Project என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

யுத்த காலத்தின் போதும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் தமிழர்களுக்கு எதிராகவும், ஆண்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குறித்த அமைப்பு ஆவணம் செய்துள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்டு செயற்படும் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள 40 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆண்கள் பாலியல் வன்முறைகளுக்கு முகம்கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

ஆண்களும், இளைஞர்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். எனினும் அது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவருவதில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமூகம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு என்பதனால் பாதிக்கப்பட்ட யாரும் விபரங்களை வெளியிட முன்வருவதில்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த யுத்த காலப்பகுதியில் பாரியளவில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றன.

எனினும், தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஆண்கள் ஒப்புக் கொண்டமை மிக குறைவாகவே இருக்கின்றது என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் தடுப்பு காவலில் இருக்கும் ஆண்கள் பொலிஸ் மற்றும் அரச படையினரால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றார்கள் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.