`சாமி-2′ படத்தில் ஹரி – விக்ரமுடன் இணைந்த ராக் ஸ்டார்

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வருகிற ஜுலை முதல் தொடங்க இருக்கிறது.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர். அவர்கள் தவிர்த்து `சாமி’ படத்தில் நடித்திருந்த பலரும் இப்படத்தில் தொடர்கின்றனர். பிரியன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்தை `இருமுகன்’, `புலி’ படங்களை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் `சாமி-2′ படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ஹரி இயக்கிய `சிங்கம்’ மற்றும் `சிங்கம் 2′ படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். அதேபோல் விக்ரம் நடித்த `கந்தசாமி’ படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இப்படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.