என் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படவில்லை: சமந்தா

நடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

“நாக சைதன்யாவுக்கும் எனக்கும் இருக்கும் காதல் தெய்வீகமானது. ஒரு படத்தில், “பெண்கள் மன அமைதியை கெடுப்பவர்கள்” என்று நாக சைதன்யா வசனம் பேசி இருக்கிறார் என்றும் உங்களால் அவர் மனஅமைதி கெட்டுப்போய் இருக்கிறாரா? என்றும் என்னிடம் பலர் கேட்கிறார்கள். சினிமாவில் பேசும் வசனத்துக்கும் சொந்த வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. அவரது வசனத்தில் குறிப்பிடும் பெண்கள் வேறு.

நாக சைதன்யா மனம் நிறைய நான்தான் இருக்கிறேன். எனக்கும் அவருக்குமான காதல் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த காதலால் எனது நடிப்புத் தொழில் கொஞ்சமும் பாதிக்கவில்லை. நடிப்பு மீதுள்ள காதலும் குறையவில்லை. நடிப்பு என்பது எனது உயிர் போன்றது. பணத்துக்காகவோ, புகழுக்காகவோ நான் நடித்துக்கொண்டு இருக்கவில்லை. அதன்மீது இருக்கும் காதலால் நடிக்கிறேன்.

சினிமாவுக்கும் எனக்கும் நல்ல பந்தம் இருக்கிறது. நடிகையாக இருக்கும் இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. சினிமாவிலும் கஷ்டம் இல்லாமல் இல்லை. நானும் சில கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். சில பிரச்சினைகளிலும் சிக்கி இருக்கிறேன். ஆனால் அவற்றை மறக்கும் அளவுக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் சினிமாவிலேயே எனக்கு கிடைத்து இருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பது போன்று நடிக்க வேண்டும் என்ற பதற்றம் ஒவ்வொரு படத்திலும் ஏற்படுகிறது. எனது நடிப்பும் கதாபாத்திரமும் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஓய்வில்லாமல் நடிக்கவும் செய்கிறேன். இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. நடிக்கும்போது இதுமாதிரி சில சங்கடங்கள் இருந்தாலும் படம் திரைக்கு வந்து நன்றாக நடித்து இருப்பதாக பலரும் பாராட்டும்போது பட்ட கஷ்டமெல்லாம் மறந்து விடுகிறது.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கில் தற்போது தயாராகி வரும் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். மேலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.”

இவ்வாறு சமந்தா கூறினார்.