நாட்டின் தென்மேற்கு பகுதியில் அடைமழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறித்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான அடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதேவேளை விசேடமாக மத்திய மலைநாட்டு பிரதேசங்களில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் அவதானம் காணப்படுகின்றது.
எனவே கடல் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.
இதேவேளை நேற்று பெய்த அடைமழை காரணமாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்று கொழும்பு மாவட்டத்தில் அடைமழை பெய்ததுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் கொழும்பின் பல இடங்களில் மரங்கள் சரிந்து வீழ்ந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரான்பாஸ், தெமட்டகொட, பொரளை, கிருலப்பனை, ஹைலெவல் வீதி, தும்புல்ல சந்தி முதலான இடங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.