இரட்டை இலை சின்னத்தை மீட்டு வந்ததே நான் தான்.. சொல்கிறார் நடராஜன்!

இரட்டை இலை சின்னத்தையும், தலைமை கழகத்தையும் மீட்டு வந்தவன் நான் தான் என்று சசிகலா கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான நடராஜன் கூறியுள்ளார்.

அதிமுகவின் இரட்டை இலையை மட்டுமின்றி அக்கட்சியின் பெயர் கொடியையும் முடக்கி தேர்தல் ஆணையம் அண்மையில் அதிரடியாக உத்தரவிட்டது.

இதையடுத்து முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, டிடிவி தினகரன் ஆகியோருடன் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜன் செய்தியார்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் செய்த அதே தவறை பாஜக அரசு செய்யக்கூடாது. அதிமுக இரு அணிகளாக பிரிந்ததற்கு அன்றும் இன்றும் பி.ஹெச். பாண்டியன் தான் காரணம் என குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே மற்ற கட்சிகளை வீழ்த்த முடியும் என்று கூறினார். மேலும் இரட்டை இலையை யார் முடக்கினாலும் அவர்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் எனக் கூறிய நடராஜன், இரட்டை இலை சின்னத்தையும், தலைமை கழகத்தையும் மீட்டு வந்தவன் நான் என்றும் கூறினார். இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.